ஒரு IAS போராட்டம்
ரேஷ்மி ஜகாடே – 2010 ஆம் ஆண்டில் புனேவிலிருந்து தேர்ச்சி பெற்ற ஒரே பெண் ஐஏஎஸ் அதிகாரி
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரைச் சேர்ந்த ரேஷ்மி சித்தார்த் ஜகாடே ஒரு அறிவியல் பட்டதாரி ; பள்ளியில் தன் கூடப் படித்துப் பாதியிலேயே வெளியேறிய சித்தார்த் ஜகாடே தான் இவரது கணவர். அவருக்குத் தன் மனைவியை ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என்ற கனவு இருந்தது. இதை ரேஷ்மியிடம் கூறினார். அறிவியலில் பட்டம் பெற்ற ரேஷ்மிக்கு பொதுத்துறைச் சேவைகளுக்கான தேர்வுகள் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை ; எனினும், தன் கணவனின் விருப்பத்திற்காக இத்தேர்வில் சேர்ந்தார்.
2003 ஆம் ஆண்டு தொடங்கிய இவரது ஐஏஎஸ் பயணம் பல இன்னல்களைச் சந்தித்தது. தொடர்ந்து மூன்று முறை இரண்டாம் கட்டத்திலேயே வெளியேறினார்; நான்காவது முறை முயன்ற போது நேர்காணல் சுற்றில் தோல்வியடைந்தார். இவ்வளவு முறை முயன்றும் வெற்றிக் கனியை அவரால் அடைய முடியவில்லை ; எனினும், அவரின் கணவர் ரேஷ்மிக்குப் பக்க பலமாக இருந்து அவர் மனந்தளராமல் பார்த்துக் கொண்டார். ஒரு வருடம் ஓய்வு எடுத்த பின் மீண்டும் தேர்வுக்காகப் படிக்கத் துவங்கினார் ; இம்முறை புவியியலைக் கைவிட்டு வரலாற்றைத் தேர்வு செய்தார்; கடினமாக உழைத்தார் ; தோல்விகள் அவரைச் சற்றும் பாதிக்க அவர் விடவில்லை. முடிவாக, 2010 ஆம் ஆண்டு, ஐஏஎஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 800 போட்டியாளர்களில் 169 ஆவது இடத்தைப் பிடித்து ,அந்த ஆண்டு புனேவிலிருந்து தேர்ச்சி பெற்ற ஒரே பெண் ஐஏஎஸ் அதிகாரி என்ற அரிய சாதனையையும் படைத்தார். பல முறை தோல்வியடைந்தாலும் , தன் கணவனின் துணையோடு கடினமாக உழைத்து வெற்றியைப் பெற்ற ரேஷ்மி பலருக்கும் ஒரு முன்னோடியாக உள்ளார்.
Comments
Post a Comment