விழுவோம் எழுவோம்
ராபர்ட் புரூஸ் என்ற மன்னன் போரில் பல முறை தோல்வியுற்று குகையில் ஒளிந்து கொண்டிருந்தபோது வலை பின்னிய சிலந்தியைப் பார்த்து சிந்தித்தான். வலை அறுந்து அறுந்து விழுந்தாலும், விடாமுயற்சியுடன் அது வலை பின்னியதைப் பார்த்து அவனுக்கு தன்னம்பிக்கை பிறந்தது. அதுவே பின்னாளில் அவனை வெற்றியாளனாக்கியது. அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் பாலிடெக்னிக் நுழைவுத் தேர்வில் தோற்றவர். கணிதமேதை ராமானுஜம், மூன்று முறை இன்டர்மீடியட் தேர்வில் தோற்று, பிறகு கணிதத் துறையில் சாதனைகள் புரிந்தவர். மாபெரும் கவிஞர் ஷெல்லி, பல்கலைக்கழகத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டவர்.
ஆபிரகாம் லிங்கன் சட்டப் பேரவை நடுவர் தேர்தலில் தோல்வி, நகராட்சி தேர்தலில் தோல்வி, மாமன்றத் தேர்தலில் தோல்வி, கமிஷனர் தேர்தலில் தோல்வி, செனட்டில் தோல்வி, துணை அதிபர் தேர்தலில் தோல்வி என்று பல தோல்விகளுக்குப் பிறகே வெள்ளை மாளிகை அதிபராக உயர்ந்தார்.பொருளாதாரச் சறுக்கல்களை அடைந்த பிறகு தான் கார்ட்டூனிஸ்ட் வால்ட்டிஸ்னி உலகப் புகழ் பெற்ற நிறுவனத்தைத் தொடங்கினார். மிக்கி மவுஸ் என்ற பாத்திரத்தை உருவாக்கினார். மருத்துவ ஆராய்ச்சி தோல்வியடைந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகே அலெக்ஸாண்டர் பிளமிங்கால் பெனிசிலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பலமுறை தோல்வி கண்ட பிறகு தான் ஹென்றி போர்டு, சிறப்பான மோட்டார் காரைக் கண்டுபிடித்தார். அதிகமான தோல்விகளைச் சந்தித்த பெர்னாட்ஷா, தொன்னுாறு முறை முயன்றால் ஒன்பது தடவை வெற்றி கிடைக்கும் என்று அறிந்து கொண்டதால் முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டதாகக் கூறியுள்ளார்.வெற்றி வாசல் கண்டவர்கள்: வானொலி கண்டுபிடித்த மார்கோனி, கம்பியில்லாத் தந்தி முறையைக் கண்டுபிடித்து அதை இத்தாலி ராணியிடம் தெரிவித்த போது அவர் அலட்சியப்படுத்தி விட்டார். பிறகு அது இருவருடங்கள் கழித்து, இங்கிலாந்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. எட்மண்டு ஹில்லரி, டென்சிங் ஆகிய இருவரும் பல தடைகளைச் சந்தித்த பிறகே எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொட்டவர்கள்.
ஆயிரம் தடவைகளுக்கு மேல் தோல்வியடைந்த பிறகே தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார விளக்கை கண்டுபிடித்தார். நுாறு சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்.
இவர்கள் அனைவருமே தோல்விகளிடம் முகவரி கேட்டுச் சென்று தான் வெற்றியின் வாசலை அடைந்தவர்கள் என்பதை அறியும் போது நமது விழிகள் வியப்பால் விரிகின்றன அன்றோ!
விதையானது தாம் விழும் போதெல்லாம் மரமாக எழுவோம் எனும்போதும், இலை தாம் விழுந்தாலும் உரமாக ஆவோம் எனும் போதும், நாம் மட்டும் விழுவதற்குத் தயங்கலாமா? விழுவோம்! எழுவோம்.
Comments
Post a Comment