வெற்றியை கண்டுபிடிங்க
தோல்வியின் மறுமுனையே வெற்றி!
வெற்றி என்றால் என்ன? ஆக்ஸ்பர்ட் டிக்ஷனரியின் படி, வெற்றி என்பது ஒருவரது இலக்கை அல்லது நோக்கத்தை அடைந்தது என்று பொருள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஐபிஎம் நிறுவனத்தின் சிஇஒ சர் தாமஸ் ஜே வாட்சன், வார்த்தைகளின்படி, “வெற்றிக்கான ஒரு பார்முலாவை என்னிடம் கேட்டீர்கள் என்றால்? அது மிகவு சுலபம் என்பேன். உங்களின் தோல்வியை ரெட்டிப்பு ஆக்குங்கள். நீங்கள் தோல்வியை வெற்றியின் பகைவனாக பார்க்கிறீர்கள், ஆனால் அது உண்மையல்ல. நீங்கள் தோல்வியால் துவண்டு போகலாம் அல்லது அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். அதனால் தைரியமாக தவறுகள் செய்யுங்கள், என்னவெல்லாம் செய்யமுடியுமோ அதையெல்லாம் செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள்! அதிலிருந்து தான் நீங்கள் வெற்றியை கண்டெடுக்கமுடியும்.”
வெற்றி, தோல்வியின் மறுமுனையில் இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஒரு தோல்வியில் இருந்து நீங்கள் மனம் துவண்டு போகலாம் அல்லது அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம். அது உங்களின் விருப்பம். வெற்றி; பேர், புகழ், செல்வம் மற்றும் மரியாதையை பெற்றுத்தரும், ஆனால் தோல்வியை அரவணைத்து செல்வோரும் தங்களின் இலக்கை நோக்கி எந்த ஒரு சலனமும் இன்று பயணிப்பர்.
நீங்கள் மதித்து போற்றும் பிரபலங்கள் பற்றி யோசித்து பாருங்கள்... அவர்கள் அனைவர் வாழ்க்கையும் தோல்விகள், கசப்பான அனுபவங்கள், ஏமாற்றங்கள், இறக்கங்கள் நிறைந்தே இருக்கும். இருப்பினும் அவர்கள் வெற்றியின் உயரத்தை அடைந்திருப்பர். எது அவர்களை வெற்றி வரை இட்டுச்சென்றது? பதில் இதோ... பொறுமை, விடாமுயற்சி, திறமை, மீண்டெழுதல், என்று ஒவ்வொரு முறை அவர்கள் கீழே விழும்போதும் கடைப்பிடித்ததால் கிடைத்த வெற்றி.
ஸ்டீவ் ஜாப்ஸ். ஓப்ரா வின்ஃப்ரீ, அப்ரஹாம் லின்கன், மஹாத்மா காந்தி, ஹென்ரி ஃபோர்ட் இவர்கள் அனைவரும் தோல்வி தவறில்லை என்று உலகிற்கு புரியவைத்தவர்கள். கல்லூரியில் இருந்து இடையில் நின்ற ஸ்டீவ் ஜாப்ஸ், தொடக்கத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டு, தொழிலில் தோல்வி அடைந்த ஒரு நபர். ஆனால் அதன் பின் நடந்தது சரித்திரம். 1985 இல் தான் பணியாற்றிய நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவுடன் சண்டையிட்டு போராடியதால் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின் NeXT என்று தானே ஒரு நிறுவனத்தை நிறுவி கடும் தோல்வி அடைந்தார். முதல் 3 ஆண்டுகள் நஷ்டத்தில் சென்றது அவரது முதல் நிறுவனம். அதன் பின் அதே நிறுவனத்தின் மூலம் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார். அதை பின்னர் ஆப்பிள் நிறுவனம் வாங்கி, MAC OS X என்று பெயரிட்டது. அதன் பின் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் நிரந்தர சிஇஒ ஆகி அதன் பங்குகள் உச்சிக்கு சென்றது உலகம் அறிந்த சாதனை. அவரது தலைமையின் போது ஆப்பிள் நிறுவன பங்குகள் 9000 சதவீதம் அதிகரித்தது இன்றளவும் பேசப்படுகிறது.
நிராகரிப்பு கடுமையானது தான் ஆனால் அதில் இருந்து மீள்வது அசாத்தியம் இல்லை. நீங்கள் அடிக்கடி நிராகரிக்கப் படுவதாகவும், ஏமாற்றம் அடைவதாகவும் நினைத்தால் கீழே கூறப்போகும் யுக்திகளை பின்பற்றுங்கள். அவை தோல்வியில் இருந்து உங்களை மீட்டு சரியான இலக்கை நோக்கி பயணிக்க உதவும்.
தோல்விகளை எழுதிங்கள்
தோல்வி என்பது அரக்கனை நேருக்குநேர் பார்ப்பது போன்றாகும். அதனால் அதைப்பற்றி எழுதி வைப்பதனால், உங்களுக்குள் தோன்றியுள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து, உங்களையே நீங்கள் ஊக்கப்படுத்தி, கூர்மையாக சிந்தித்து, பகுப்பாய்வோடு செயல்பட உதவும். நீங்கள் ஏன் தோற்றீர்கள்? நல்ல ஒரு தயாரிப்பை உருவாக்க நீங்கள் என்ன செய்திருக்க முடியும்? உங்கள் இலக்கை அடைய மாற்றுவழி ஏதேனும் உண்டா? இந்த கேள்விகளுக்கான பதில்களை கண்டுபிடிக்க, நீங்கள் உங்கள் தோல்விகளை பற்றி எழுதி வைப்பது நல்லது. அவ்வாறு செய்யும்போது உண்மையாக எழுதுங்கள் அப்போதுதான் தோல்வியின் காரணத்தை கண்டுபிடிக்க முடியும்.
நிராகரிப்புகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாதீர்
பெரும்பாலும் பிறரது ஒப்புதலின் அடிப்படையில் தோல்வி அடங்கியுள்ளது. பிறர் உங்கள் ஐடியாவை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி நீங்கள் ரொம்ப யோசிக்கவேண்டாம். மற்றவர்களின் கருத்துகள் உங்களின் கனவை அடைய தடையாய் அமையலாம், அதனால் எல்லாவற்றுக்கும் பிறரை எதிர்பார்க்காதீர்கள். விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களை பார்த்து கேலி செய்து சிரித்த உலகம் தான் இது. நினைவில் கொள்ளுங்கள்! அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்கள் ஆராய்ச்சியை தொடர்ந்ததால் உருவானதே விமானங்கள். பல தடவை தங்கள் உருவாக்கத்தில் தோல்வியை கண்டாலும் செய்த தவறில் இருந்து திருத்திக்கொண்டு செயல்பட்டதால் கிடைத்த வெற்றி அது. அவர்களின் வெற்றியையும் மகிழ்ச்சியும் அவர்களே தீர்மானித்தனர்.
தோல்வியை கண்டு புலம்பாதீர்கள்
நீங்கள் முன்னேறி செல்ல நினைத்தால் முதலில் தோல்வியுற்றவற்றில் இருந்து நகர்ந்து செல்லுங்கள். அதைப்பற்றி நினைத்து புலம்புவதால் நீங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டு நிரந்திர பாதிப்பை அடைய வாய்ப்புள்ளது. நேர்மறையாக சிந்தியுங்கள். “நான் சாத்தியமாகக் கூடிய வழியை தேடிக்கொண்டிருக்கிறேன்”, ”என்னால் முடியும், என்னால் நிச்சயம் முடியும்”, “ கடந்தகால தோல்வியில் இருந்து நான் கற்றுக்கொண்டு சரியான திட்டத்தை வகுக்கிறேன்,” என்பன போன்ற ஊக்கம் தரும் வாக்கியங்களை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். இது உங்களின் வருங்கால செயல்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.
உங்களை உங்கள் தோல்வி அல்லது வெற்றி அடையாளப்படுத்தாது. அதைவிட நீங்கள் உங்கள் தோல்வியை எப்படி வெற்றியாக்கினீர்கள் என்றே அனைவரும் பேசுவர். அடுத்த முறை ஒரு வெற்றிகரமான தொழிலதிபர் அல்லது சிஇஒ’வை நீங்கள் பார்க்கும்போது, அவர் பின் இருக்கும் தியாகங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், கஷ்டகாலம், தவறுகள், இவை எல்லாம் உங்கள் நினைவுக்கு வரவேண்டும். அத்தகைய இடத்தை அடைய அவர்கள் பாடுபட்டதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
Comments
Post a Comment