தமிழன்டா..... படிச்சா புரியும்


தமிழும் அறிவியலும்


தமிழும் அறிவியலும்

தமிழ் ஒரு ஆழ்கடல். அதன் படைப்புகளை படித்தறிய பிறவி ஒன்று போதாது. அக்கடலின் ஒரு சிறுத் துளியை மட்டுமே படித்துவிட்டு, அதன் சிறப்பில் வியந்து, வியந்ததில் சிலவற்றை மட்டுமே இங்கு பகிர்ந்துள்ளேன்.

அமுதே தமிழே என்று தமிழைப் போற்றி, வாரி அனைத்து முத்தமிடும் நமக்கு, அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் கடமையும் உண்டு!!

‘பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கேட்டு
நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
வாழ்ந்திடல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்!!’

எனத் தமிழின் சிறப்பை எடுத்துரைக்கும் பொறுப்பை நம் தோள்களில் அன்று ஏற்றிவிட்டுச் சென்றான் மகாக்கவி. தூக்கிச் சுமப்பதும் சுகமாகவே இருக்கிறது.

தமிழில், தமிழ் இலக்கியங்களில், உள்ளவை ஏராளம். தமிழ் ஒரு வாழ்வியல் மொழி என்றால் அது பொருந்தும். தமிழ் ஒரு அறிவியல் சார்ந்த மொழி என்றால் அதுவும் பொருந்தும்!! வாழ்வியல் மொழி என்பதற்கு ஆதாரங்கள் பல பல. அதற்கு எடுத்துக்காட்டுகள் இனித் தேவையில்லை!! திருக்குறள் ஒன்று போதும். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகிவிடும்.

தமிழ் அறிவியல் சார்ந்த மொழியா? தமிழ் இலக்கியங்களில் அறிவியலின் பதிவுகள் உண்டா? என்றால், ‘ஆமாம்’ என்று கண்டிப்பாகச் சொல்லலாம்.

இலக்கியங்களில் மட்டுமல்ல, தமிழ் மொழியே அறிவியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு மொழி. வியப்பாக உள்ளதல்லவா?

விஞ்ஞானம், விண்ணில் இருக்கும் ஞானம் என்றும் பொருள் கொள்ளலாமோ?

எங்கும் ஞானம் கொட்டிக்கிடக்கிறது. அதை அள்ளி அள்ளிக் குடிக்கலாம்; நம்மிடம் இருக்கும் பாத்திரங்களில் ஓட்டைகள் இல்லாதவரை!!

அப்படியென்றால், கொட்டிக்கிடக்கும் ஞானத்தை பார்க்கும் அறிவுதான் அறிவியலோ?

ஞானம் எங்கும் உள்ளதென்றால், புதிதாக எதையும் கண்டுபிடிப்பதல்ல விஞ்ஞானம். கண்ணுக்குத் தெரியாமல் அறிவுக்குப் புலப்படாமல் ஒளிந்திருக்கும் ஒன்றைக் கண்டுப்பிடித்து வெளிக்கொண்டுவருவதே அறிவியல் எனலாம்.

உதாரணமாக, புவிஈர்ப்பு சக்தி என்பது புதைந்துக் கிடந்த ஒரு ஞானம். எங்கும் இருக்கும் புவிஈர்ப்பு சக்த்தியை நியூட்டன் கண்டுப்பிடித்து நமக்குச் சொன்னான். புவிஈர்ப்பு சக்த்தியை அவன் உருவாக்கவில்லை!!

தமிழ் மொழியின் உருவாக்கமும், அமைப்பும் அறிவியல் தாக்கத்தோடு இருப்பதும், தமிழ் இலக்கியங்களை அறிவியல் பலவகையில் சிறபித்திருப்பதும், தமிழ் படைப்புகள் பல விஞ்ஞானத்தின் வெளிப்பாடாய் அமைந்திருப்பதும், அன்றே நம் தமிழர்களிடம் செழித்திருந்த அறிவியல் செல்வாக்கை நமக்கு காட்டுகிறது.

தமிழர்களுக்கு எப்படி இந்த விஞ்ஞானம் புலப்பட்டது? சிறப்பு பள்ளிகளுக்குச் சென்று படித்தார்களா?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடியாகிய நம் தமிழ் குடி அன்றுதொட்டே இயற்கையோடு மிக நெருங்கி வாழ்ந்த ஒரு சமுகம். இயற்கையின் சிறப்பறிந்து, இயற்கையை போற்றி, அதைப் பாதுகாத்து, இயற்கையை வணங்கி வாழ்ந்த ஒரு இனம் நம் தமிழினம்.

இந்த நெருங்கிய உறவால், எங்கும் கொட்டிகிடக்கும் ஞானத்தை அவர்களால் எளிதில் பருகமுடிந்தது. நான் முன்பே குறிப்பிட்டதுபோல், நம் பாத்திரங்களில் ஓட்டைகள் இல்லாதவரை நம்மால் எளிதில் ஞானத்தை வாங்கிக் கொள்ளமுடியும். கொட்டிகிடக்கும் விஞ்ஞானத்தை இயற்கையும் அள்ளி அள்ளித் தந்தது. அதை ஆனந்தமாய் கொண்டாடினார்கள் நம் முன்னோர்கள் எனலாம்!!

இன்று, இந்த விஞ்ஞானத்தின் வீக்கத்தால், (வளர்ச்சியால் அல்ல), உலகம் சுருங்கி நம் கைக்குள் வந்துவிட்டது ஆனால் முரண்பாடாய் நாம் இயற்கையை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம்!!

தமிழ் இலக்கியங்களில் அறிவியல்


இயற்கையோடு நம் தமிழர்கள் எப்படி ஒன்றி வாழ்ந்தார்கள்? இதற்கு ஆதாரங்கள் ஏராளம்!! தாம் வாழ்ந்த நிலங்களைக்கூட அவற்றின் தன்மைக்கேற்ப குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பிரித்தார்கள். இதில் அறிவியல் உள்ளது.

திசைகள் அறிந்து, வீசும் காற்றின் திசையைக்கொண்டு காற்றின் தன்மை வேறுபட்டதை அறிந்து, காற்றையும் பிரித்து பெயரிட்டார்கள்!!

ஒவ்வொரு திசையிலிருந்தும் வீசும் காற்றுக்கு அதன் தன்மை மாறுபட்டு இருந்தது.
தெற்கிலிருந்து வீசினால் தென்றல்
வடக்கிலிருந்து வீசினால் வாடை
மேற்கிலிருந்து வீசினால் கோடை
கிழக்கிலிருந்து வீசினால் கொண்டல் என அழைத்தார்கள்.
இதிலும் அறிவியல் உள்ளது.

அன்று என் பாட்டியும், அம்மாவும் ரசத்திலும், கூட்டிலும் மஞ்சள் பொடி சேர்த்து சமைத்தார்கள். மிளகும், சீரகமும், வெந்தயமும், சோம்பும் என் வீட்டு சமையலறையின் அயிந்தரைப்பெட்டியில் குடியுரிமைப் பெற்ற நிரந்திர வாசிகளாகவே இருந்தன. நல்லெண்ணை, நெய், தேன், இஞ்சி என்று அனைத்தும் சமையல் அறையை சுதந்திரமாக வலம் வந்தன.

உணவே மருந்தாக வாழ்ந்தார்கள் நம் தமிழ் முன்னோர்கள். இதில் அறிவியல் உள்ளது.

அப்பொருட்களில் உள்ள மருத்துவ குணங்களை மேல்நாட்டு ஆய்வுகள் இன்று நமக்கு எடுத்துச் சொல்லும்போது சற்று வெட்கமாகத்தான் உள்ளது.

உணவில் மட்டுமல்ல, கட்டிடக்கலை, வான சாஸ்த்திரம், இயற்பியல், வேதியியல், கணிதவியல் என்று பல அறிவியல் துறைகளில் தமிழர்கள் முன்னோடிகலாகவே இருந்தார்கள்.

கடும் புயல்களையும், பல நில நடுக்கங்களையும் தாங்கி இன்றும் கம்பீரமாய் ஓங்கி நிற்கும் நம் கோயில் கோபுரங்களே நம் கட்டிடக்கலைக்கு சாட்சி!!

கிருஷ்ணாபுரம் கோயிலில், மன்மதசிலையில், மன்மதன் கையிலிருக்கும் கரும்பின் மேல் பகுதியின் துவாரத்தில் ஒரு ஊசியை போட்டால், அந்த ஊசி கரும்பின் கீழ் பாகம் வழியே வந்து விழுமாம். துளைப்பான் அதாவது driller இல்லாத அக்காலத்தில், கல்லில் செதுக்கப்பட்ட அந்தக் குறுகிய கரும்பில் எப்படி துவாரம் துளைத்திருக்க முடியும்? எறும்புகள் ஊறி கல் தேயுமா? தேயும்!!

திருக்குறளில் அறிவியலுக்கு ஒரு சான்று

திருக்குறளின் அறத்துப்பாலில், வான் சிறப்பு என்னும் அதிகாரத்தில் வரும் ஒரு குறள்

‘நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.’

விளக்கம்: ஆவியான கடல்நீர் மேகமாகி, அந்தக்கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்த சமுதாயத்திற்கு பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்!!

இதுவே இக்குறளின் பொருள்.

இதுதானே இன்று நாம் படிக்கும் evaporation, condensation, precipitation என்னும் water cycle.

ஆவியான கடல்நீர் – evaporation
மேகமாகி – condensation
மழையாகி – precipitation

விஞ்ஞானத்தை வைத்து அறத்தை விளக்குவது ஆச்சரியப்பட வைக்கிறதல்லவா!!

இந்த அறிவியலை வாழ்வியலோடு இணைத்துச் சொல்ல தமிழால் மட்டும்தானே முடியும். இது தமிழின் அழகு!! அதன் ஆழம்!! அதன் சிறப்பு!!

அடுத்து கணிதத்தில் ஒரு பாடல்

கிரேக்க நாட்டு கணித மேதை பிதகோரஸ் (Pythagoras)என்பவர் செங்கோண முக்கோணத்தின் (right angled triangle) கர்ணத்தை , அதாவது hypotenuse கண்டுபிடிக்க தந்த வழிமுறை இது

It states that the square of the hypotenuse (the side opposite the right angle) is equal to the sum of the squares of the other two sides.

where c represents the length of the hypotenuse and a and b the lengths of the triangle’s other two sides.
இந்த தன்மை, கட்டிடக்கலை முதற்கொண்டு பலத் துறைகளில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது. அவர் பெயராலேயே இந்தத் தேற்றம் Pythagoras theorem என அழைக்கப்படுகிறது. இவை நாம் அறிந்ததே.

இதே கர்ணத்தை கணக்கிடும் முறை நம் தமிழ் இலக்கியப் பாடல் ஒன்றில் உள்ளது.

‘ஓடிய நீளந்தன்னை ஓரெட்டு கூறதாக்கி
கூற்றிலே ஒன்று தள்ளி குன்றத்தில் பாதி சேர்த்தால்
வருவது கர்ணம் தானே.’

இதன் விளக்கம் ஆங்கிலத்தில்
Divide the longer side into 8 equal parts and remove one part from it. Then if you add half of the other side to that, you will get the Hypotenuse.

இரண்டு பக்கங்களில் நீளமான பக்கத்தை எட்டாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை நீக்கி, இதோடு மற்ற பக்கத்தின் பாதியை சேர்த்தால் வருவது கர்ணம்.

வியப்பாக உள்ளதல்லவா? Square root இல்லாமலேயே விடையை கண்டுபிடித்துவிடலாம்.

ஒரு எடுத்துக்காட்டு இங்கே

a = 6; b = 8; Find out C which is the hypotenuse.

Pythagoras theorem படி

c² = 6² + 8²
= 36 + 64 = 100
C = 10

மேலே குறிப்பிட்ட தமிழ் பாடலின் படி
இரண்டு பக்கங்களில் நீளமான பக்கத்தை எட்டாகப் பிரித்து, அதில் ஒரு பங்கை நீக்கி

அதாவது

(7/8) * 8 = 7

இதோடு மற்ற பக்கத்தின் பாதியை சேர்த்தால் வருவது கர்ணம்.

7 + (6/2) = 7 + 3 = 10

வானியல், ஜோதிடக்கலை

காலத்தையும் நேரத்தையும் கூட இயற்கையில் உள்ள அறிவியலைக்கொண்டே கண்டறிந்தது தமிழினம்.
8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாளின் திருப்பாவையில் வரும் 13ஆம் பாடல் இது
(9ஆம் நூற்றாண்டு என்றும் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்)

‘புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.’

பாடலில் வரும் ஒரு வரி

‘வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று’

பொதுவாக, வெள்ளி (venus, ஜோதிடத்தில் சுக்கிரன்), பூமிக்கு அருகில் இருப்பதனால், விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பு வெள்ளி நம் கண்களுக்குத் தெரிவதுண்டு. இதை விடிவெள்ளி அல்லது Morning Star என்பார்கள்.

ஆனால், வியாழன் பூமிக்கு தொலைவில் இருப்பதனால், அது கண்ணுக்கு தெரிவதில்லை.
அதன் சுழர்ப்பாட்டில் பூமிக்கு அருகில் வரும்போதுதான் வியாழன் கண்களுக்குத் தெரியும்.

மேலும் இந்த இரு கிரகங்களின் இயக்கமும் வேகமும் வெவ்வேறு. வெள்ளி ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குச் செல்ல ஒருமாத காலமாகும். ஆனால், வியாழனுக்கோ ஒரு வருடமாகும்.

வியாழனின் மாற்றம் நமக்கு பரீட்ச்சியமானதுதான். எப்படி என்கிறீர்களா? குரு பெயர்ச்சி தான் இது. வியாழனின் மற்றறொரு பெயர்தான் குரு. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு குரு போவதுதான் குரு பெயர்ச்சி.

வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று என்றால் வியாழன் வக்ரமாகியுள்ளது என்பது தெரிகிறது. மேலும் மார்கழி மாதம் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் நேரம். இவைகளை வைத்து கணக்கிடும்போது, 8ஆம் நூற்றாண்டில் எந்த ஆண்டு, எந்த மாதம், எந்த நாளன்று ஆண்டாள் இப்பாடலைப் பாடியிருப்பாள் என்று அறிஞர்களாலும் வானியலாளர்களாலும் கூறமுடிகிறது.

வானவியல், ஜோதிடம் அறிந்தவர்களுக்கு இது சுலபமாய் விளங்கும்.

வானில் தெரியும் விண்மீன்களையும், கோள்களையும் கொண்டு வான சாஸ்திரம் அறிந்து சிறுமி ஆண்டாள் பாடுவது நம்மை வியக்கத்தான் வைக்கிறது.

இதிலும் அறிவியல் உள்ளது.

கம்பராமாயணத்தில் அறிவியல் சிந்தனைக்கு ஒரு சிறுச் சான்று

கம்பராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்திக்கொண்டு போனப்பின், ராமன் லட்சுமணனை சீதையைத் தேடிவர அனுப்புகிறான். லட்சுமணன் வெளியில் சென்று அந்தக் காட்டில் வண்டியின் சக்கரங்களின் தடம் கண்டு அதைத் தொடர்ந்து போகிறான். சற்று தூரம் சென்றதும் சக்கரங்களின் தடம் மறைந்துவிடுகிறதாய் கம்பன் எழுதுகிறான். ரன்வேயில் ஓடிப்போய் அந்த புஷ்பக விமானம் புறப்பட்டு விண்ணில் பறந்து சென்றுவிடுகிறதாய் நாம் அறிகிறோம்.

இப்படி நம் தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சான்றுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.
படிக்க படிக்க மேலும் கிடைக்கும் சான்றுகளை இதோடு சேர்க்க எண்ணியுள்ளேன்.

தமிழ் மொழியில் அறிவியல்


தமிழ் இலக்கியங்களில் வாழ்வியலோடும், காதலோடும், வீரத்தோடும் பக்தியோடும் அறிவியல் ஒன்று கலந்திருந்தது. ஏன் என்றும் பார்த்தோம். ஆய்வுகளும் ஞயாயமாகவே படுகிறதல்லவா!!

ஆனால், தமிழ் மொழி எவ்வாறு அறிவியலின் அடிப்படையில் இருக்கமுடியும்? வியப்பிலும் வியப்பிது.

இங்கே நான் குறிப்பிட்டிருக்கும் அறிவியல் விளக்கம் வேறு எங்கும் நான் படித்திருக்கவில்லை. வேறு நூல்களிலோ அல்லது வலைப்பதிவிலோ வேறு ஒருவர் இக்கருத்தை பதிவு செய்திருக்கலாம். ஒரே கருத்து, கண்ணோட்டம் பலருக்கும் தோன்ற வாய்ப்புகள் உண்டு. இதை இங்கு ஏனோ பதிவு செய்யத் தோன்றியது .

2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பொதுமறை நூல் திருக்குறள். இனி பல்லாயிரம் ஆண்டுகள் கழித்து வரும் நம் சமூகத்திற்கும் வாழ்வியலைக் கற்றுக்கொடுக்கும் நம் திருக்குறள் என்பதில் ஐயமில்லை.

நன்கு கற்று தேர்ந்து, பண்பாட்டில் சிறந்து விளங்கும் ஒரு இனத்தால்தான் இப்படி வாழ்வாங்கு வாழும் ஒரு நூலைத் தர முடியும்.

ஒரு சமூகம், கலாச்சார பண்பாட்டில் சிறந்து விளங்க எவ்வளவு ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும்?

பல பரிணாம வளர்ச்சிகளுக்குப்பின், மனித இனம் முதலில் செய்கைகளாலும், பின்பு ஓசைகளாலும், பேசாமல் பேசி, பிறகு ஓசை சொல்லாகி, சொற்கள் பெருகி, சொற்களுக்கு விதிகள் அமைத்து ஒரு மொழியாக வடிவமாவதற்கு எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்!!

பின், அந்தச் சமூகம் மொழியின் வாயிலாக கருத்துக்கள் பரிமாறி, மொழியால் சிந்தித்து, அறிவைப் பெருக்கி, நல்லது கெட்டதென்று ஆராய்ந்து பிரித்தெடுத்து, அவைகளை பழக்கங்களாக்கி, பின் பழக்கத்தில் இருப்பவை பண்பாடாகி, பண்பாடு மெருகேற எத்தனை எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கும்!!

இப்படி வளர்ந்து அறநெறிகள் நன்கறிந்த இனத்தால்தானே திருக்குறள் போன்ற அறநெறி நூல்களை உலகத்திற்கு தர இயலும்!!

அப்படியென்றால் தமிழின் வயதென்ன? சொல்லத்தெரியவில்லை.

அவ்வளவு பழைமை வாய்ந்த இம்மொழி அறிவியல் அடிப்படையில் செதுக்கப்பட்ட ஒரு மொழி. அதுமட்டுமல்ல. இந்தப் பகுப்பாய்வில் ஆன்மீகமும் அறிவியலும் கைகோர்த்து நடந்துவருவதையும் பார்க்கலாம்.

தமிழில் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள் என்றிருப்பது நமக்குத் தெரியும்.

உயிர் எழுத்துக்கள்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

மெய் எழுத்துக்கள்
க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்

மெய் + உயிர் = உயிர்மெய்

உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர் மெய் எழுத்தாகிறது என்பதும் தெரியும்.

மெய்யும் உயிரும் ஒன்று சேரும்போது புதியதாய் ஒன்று பிறப்பது அறிவியல்.

உயிரியல் (biology) இதைத்தானே சொல்லித்தருகிறது.

ஆண் விந்துவில் இருக்கும் உயிர் அணுக்கள் பெண்ணின் முட்டையை தேடிவந்து சேருவது படைபாற்றால்; இது சிருஷ்டித்தல்; உருவாகுதல்; இது இயற்கை.

ஆன்மீகத்திலும், சிவத்தத்துவம் அதாவது நம் ஆன்மா, சக்தியை, அதாவது பிரக்கிருதியை வந்துச் சேர்வதைப்போல .. சுருக்கமாகச் சொன்னால், உயிர் உடலை (மெய்யை) சேர்வதைப்போல எனலாம்.

ஆன்மீகமும் விஞ்ஞானமும் வெவ்வேறல்ல. இரண்டும் சொல்லுவது ஒன்றைத்தான்.

பிரபஞ்சத்தின் உண்மை, மனித வாழ்வியலின் உண்மை.. இந்த உண்மையின் அடிப்படையில் உருவானதுதான் தமிழ் மொழியும்.

தமிழ் மொழியிலும் மெய் எழுத்து இருக்க, உயிர் வந்து மெய்யுடன் சேர்கிறது.

க் + அ = க
க் + ஆ = கா
ச் + ஒ = சொ

மேலும், தமிழ் மொழில் நான் பெரிதும் வியக்கும் மற்றொரு குணம் அதன் object oriented பண்புகள்; Inheritance என்னும் அதன் பண்பு.

நம் முன்னோர்களிடமிருந்து நாம் பரம்பரையாக அவர்கள் சொத்தைப் பெறுகிறோம். தாத்தா சொத்து பேரன் பேத்திக்கு தானே. அதுப்போல, அவர்களிடமிருந்து மரபணுக்கள் வழியாக பல பண்புகளைப் பெறுகிறோம், உயரம், குட்டை, மூக்கின் நீளம், நகங்களின் வடிவம் இப்படி பல உடல் சார்ந்த பண்புகள் உட்பட பல தாக்கங்கள் நம் முன்னோரிடமிருந்து வந்தவை எனலாம்.

இந்த அறிவியலின் அடிப்படையில் அமைந்த மொழி நம் தமிழ் மொழி.
பிற இந்திய மொழிகளில், ஒரு எழுத்தின் ஒசைகேர்ப்ப பல ஒப்பான எழுத்துக்கள் இருப்பதுண்டு. உதாரணமாக, ‘க’ என்ற எழுத்தின் சொல்லழுத்த்தின் அடிப்படையில், பல ‘க’ க்கள் உண்டு. ‘ga’, ‘ka’.. இப்படி சொல்லலாம்

கங்காரு என்பதில் ‘க’, என்ற எழுத்து, ‘ga’ வாக ஒலிக்கிறது. கருப்பு என்ற சொல்லில் ‘க’, ‘ka’ வாக ஒலிக்கிறது. இப்படி ஒரே எழுத்துக்கு சொல்லழுத்தம் அடிப்படையில் ‘ga’விற்கு ஓர் எழுத்தும், ‘ka’விற்கு ஒரு எழுத்தும் இருப்பதை ஒரு சிறப்பாகவும், தமிழில் ஒரே ஒரு ‘க’ இருப்பது ஒரு குறையாகவும், சற்றும் யோசிக்காமல் பழி சொல்வோரும் உண்டு.

உண்மையில், இது தமிழ் மொழியில் இருக்கும் ஒரு சிறப்பு. ஒவ்வொரு சொல் அழுத்தத்திற்கும் ஒரு எழுத்து இருப்பது புத்திசாலித்தனமல்ல; அது ஆரோக்கியமல்ல.

‘நுங்கு’ என்ற சொல்லை சொல்லும்போது, ‘கு’ எவ்வாறு ஒலிக்கிறது? பாக்கு என்ற சொல்லும் ‘கு’ வில் தான் முடிகிறது. இந்த சொல்லை சொல்லும்போது ‘கு’ எவ்வாறு ஒலிக்கிறது?

‘நுங்கு’ வில் ‘கு’, ‘gu’ வாகவும், பாக்கு என்ற சொல்லில், ‘கு’, ‘ku’ வாகவும் ஒலிக்கிறதுதானே? எப்படி ஒரே ‘கு’ இரண்டு சொல்லழுத்தங்களைக் கொண்டு நம்மால் சொல்ல முடிகிறது? பள்ளிகளில் கற்றோமா? இல்லை வேறு பல புத்தங்களைப் படித்து தெரிந்துக்கொண்டோமா? யோசித்துப்பார்த்தால் இல்லை. பிறகு எப்படி?

மிகவும் சுலபம். தமிழில், உயிர்மெய் எழுத்துக்களை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று பிரித்து வைத்தார்கள் அவ்வளவுதான். இங்குதான் ‘Inheritance’ என்ற கருத்துப்படிவம் (concept) வருகிறது.‘கு’ என்ற எழுத்து அதற்குமுன் இருக்கும் எழுத்திடமிருந்து அதன் தன்மையை வாங்கிக்கொண்டு அந்த அடிப்படையில் ஒலிக்கிறது.
ஒரு எழுத்தின் முன் இருக்கும் எழுத்து அந்த எழுத்தின் தன்மையை தீர்மானிக்கிறது.

‘நுங்கு’ என்ற சொல்லில் ‘ங்’ என்ற எழுத்து அதற்குப்பின் வரும் ‘கு’ எவ்வாறு ஒலிக்கவேண்டும் என்று தீர்மானிக்கிறது.

அதேபோல்தான் ‘பாக்கு’ என்ற சொல்லில், ‘க்’ என்ற எழுத்து, அதற்குப்பின் வரும் ‘கு’ எவ்வாறு ஒலிக்கவேண்டும் என்று ‘கு’ வின் சொல் அழுத்தத்தை தீர்மானிக்கிறது.

இதை நாம் எந்த பள்ளியிலோ, கல்லூரியிலோ சென்று பயிலவேண்டாம். எழுத்துக்களே ஓசையை பார்த்துக்கொள்ளும். ‘சங்கு’ என்ற சொல் ‘sangu’ என்று தான் ஒலிக்கும். ‘sanku’ என்று சொல்ல இயலாது.. இது மொழியின் தர்மம்!! இது தமிழ் மொழியின் இயற்கை.

எத்தனை அழகான மொழி நம் தமிழ்!!

உள் சென்று நோக்க நோக்க பல வியப்புகள் தென்படுகிறது.

இன்னும் கொட்டிக்கிடக்கும் வியப்புகளை உங்கள் ஆய்வுக்கு விட்டுவிட்டு இந்த பதிவை முடிக்கிறேன்!!

Comments