யார் நண்பன்???

யார் நண்பன்?

அர்ஜுனன் அளித்த அம்புப் படுக்கையில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு உரைத்த கதை

ஆல மரப் பொந்து ஒன்றில் எலி வாழ்ந்து வருகிறது. இயற்கையின் விதிப்படி பூனைக்கு அது ஆகாரம் என்பதால், ஆலமரப் பொந்தின் அருகே எலியின் வரவை எதிர் நோக்கி பூனையொன்று காத்து இருக்கிறது. பூனைக்கு பயந்து எலியும் வலைக்கு உள்ளேயே வாழ்ந்து வருகிறது.

ஒரு சமயம் அவ்வழியே சென்ற வேடன் மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் வலை விரிக்க, பூனை அதில் அகப்பட்டுக்கொண்டது. இனி பகைவனின் பயம் ஒழிந்தே விட்டது என்று குதூகலித்த எலியும் மெதுவாக வலையை விட்டு வெளியெ வருகிறது. வெளியே வந்த நொடி, வேறு வகையில் ஆபத்தான சூழ்நிலை.

கோட்டான் எலியின் மேல் எந்தக் கணமும் பாய்ந்து குதற தயாராய் காத்திருக்க, வேறு புறமாக ஓடி ஒளியலாம் என்றால் அங்கே கீரிப்பிள்ளையின் கொடூரம். என்னதான் செய்யும் எலி?

எதிரி என்றாலும் தற்போது துணிந்து அணுகக்கூடிய நிலையில் இருப்பது வலையில் மாட்டியிருக்கும் பூனை மட்டுமே.

அதன் தலைக்கே ஆபத்து எனும் நிலையில் தவிப்பதால் பூனையே தாற்காலிகமாக நமக்கு உதவக்கூடியவன் என்று முடிவு செய்கிறது எலி.

அதனிடம் தன் நிலையைக் கூறி, அதனிடத்தில் அண்டி இடம் கொடுத்தால், கோட்டானோ, கீரியோ தன்னை ஒன்றும் செய்யாது, என்று முடிவு செய்து பூனையை அணுகி நண்பனாக்கிக் கொள்கிறது.

பதிலுக்கு தானும் வலையை கடித்துப் பூனையை காப்பாற்றுவதாக சத்தியம் செய்கிறது.

சிறிது நேரம் காத்திருந்த கீரியும் கோட்டானும் பூனையின் நண்பனான எலியை இப்போதைக்கு நம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் அதன் வழியே சென்று விட, வலையில் மாட்டியிருந்த போதும் பூனையின் உதவியால் சாமர்த்தியமாக அப்போது எலி தப்பியது.

இனி வலையை அறுத்து காப்பாற்று என்று பூனை கேட்க, எலியொ மறுத்து பேசுகிறது.

"நீ உன் சத்தியத்தை அல்லவா மீறுகிறாய்" என்கிறது பூனை.

"உன்னை காப்பாற்ற மாட்டேன் என்று சொல்லவில்லை.

வேடன் வரும் சமயமாய் வலையை அறுத்து விட்டால், உயிர் காத்துக்கொள்வதே உன் தலையாய கவனமாய் இருக்க, என்னை விட்டு விடுவாய். இப்பொழுது வலையை அறுத்தால், அடுத்து உன் பசிக்கு நானல்லவோ உணவு" என்று புத்திசாலி எலியின் பதில்.

சொன்னசொல் தவறாமல் வேடன் வரும் சமயமாய் எலி வலையை அறுத்து பூனையை தப்பிக்க விடுகிறது .

மறுபடி தன் பொந்துக்குள் சென்று ஒளிந்து கொண்ட எலியுடன் நைச்சியமாய் பேச்சு கொடுக்கிறது பூனை.

"என் உயிரைக் காத்த நீ இனி என் நண்பன், இருவரும் இனி நல்ல நண்பர்களாய் வாழலாம்"

அப்போது புத்திசாலி எலி

"அது எப்படி முடியும்? 

நீ என் விரோதி என்பது இயற்கையின் நியதி..!. 

உன் ஆகாரமே நான்தான்.

இருவருக்கும் சாதகமான காரியத்திற்காக தோன்றிய நம்நட்பு அத்துடன்முடிந்தது.

உறவும்நட்பும் கூட காரிய காரணத்திற்காகத் தான். தேவைகள் முடிந்துவிட்டால் அங்கு நட்பும் உறவும் யாரும் பாராட்டுவதில்லை. இதுஉலகஇயல்பு, நியதி" என்கிறது எலி.

இங்கு எலியின் புத்தி சாதூர்யம் நட்பு பாராட்டும் போது பல நேரம் நமக்கும் அவசியமாகிறது.

இல்லையெனில், நைச்சியமாகப் பேசும் பசுத்தோல் போர்த்திய புலிகளிடம் சிக்கித் தவிக்க நேரிடும்.

இந்த நீதி தர்மத்திற்கு ஏற்புடையது. சிறந்த அறிவை உபயோகப்படுத்தி நண்பன், பகைவன், வித்தியாசம், சண்டை, சமாதான சந்தர்ப்பம், ஆபத்திலிருந்து விடுபடும் புத்தி, பகைவனுக்கு சமமான பலம் இருக்குமானால் அவர்களிடம் சமாதானம் செய்து கொண்டு அதன் வழியாக காரியத்தை சாதித்தல் போன்ற வழிகளையும் சொல்லி முடித்தார்.

மன்னனுக்கு மட்டுமல்ல நமக்கும் உபயோகமான கதை இது.

Comments