பணம் சம்பாதிக்க மாத்தி யோசி
இந்த கட்டுரையில் நாம் பார்க்க கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு வெற்றிகரமான பணக்காரர்....
- திருபாய் அம்பானி
1970 - கள் வரை, இந்தியாவின் முக்கிய தொழில் அதிபர்கள் யார், பெரும் பணக்காரர்கள் யார் என்று கேட்டால், சின்னக் குழந்தையும் சொல்லும் - டாடா, பிர்லா.
2017-ல் இந்தியாவின் குபேரர் யாரென்று கேட்டால், எல்லோரும் உச்சரிக்கும் ஒரே பெயர் - முகேஷ் அம்பானி.
இந்திய பிசினஸ் வரலாற்றில், ரிலையன்ஸுக்கு முன் (ரி.மு), ரிலையன்ஸுக்கு பின் (ரி.பி) என இரண்டு காலப் பிரிவுகள். உருவாக்கியவர் தீரஜ்லால் ஹீராச்சந்த் அம்பானி. ஊடகங்களும், பொதுமக்களும் வைத்த செல்லப் பெயர் திருபாய்.
குஜராத் மாநிலத்தில் சோர்வாட் என்னும் சின்னக் கிராமம். அப்பா பள்ளி ஆசிரியர். வறுமைக்கு மேலே கொஞ்சம் தலைதூக்கிப் பார்க்கும் வாழ்க்கை. அதனால், இளமை முதலே, பணம் பண்ணும் ஆசை, வெறி. அவர் அண்ணா ரம்ணிக்பாய் சொன்னார், ‘திருபாய் சின்ன வயதிலேயே காசு பார்க்கத் தெரிந்தவன். கிராமத்தில் திருவிழா நடக்கும்போது, அம்மாவிடம், வெங்காய பஜ்ஜியும், உருளைக் கிழங்கு பஜ்ஜியும் செய்துதரச் சொல்லுவான். முழுக்க விற்றுவிட்டு வந்து அம்மாவிடம் பணத்தைக் கொடுப்பான்.’
17 வயது. பள்ளிப் படிப்பை முடித்தான். அண்ணன் ரம்ணிக்பாய் ஏடன் நாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தம்பியும் கப்பல் ஏறி அங்கே போனார். கல்லூரியையே எட்டிப் பார்க்காத இளைஞனுக்குக் கவர்னர் வேலையா தருவார்கள்? பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடும் பையனாகச் சேர்ந்தார். பணத்தை மோப்பம் பிடிக்கும் சாமர்த்தியம் ரத்தத்தில் ஊறியிருந்தது. ஏடன் நாட்டின் நாணயம் ரியால். சுத்த வெள்ளித் தயாரிப்பு. நாணயத்தின் மதிப்பைவிட அதில் இருந்த வெள்ளியின் மதிப்பு அதிகம் என்று திருபாய் கண்டுபிடித்தார். ரியால் நாணயங்களைச் சேமித்தார். உருக்கினார். வெள்ளியை நகை வியாபாரிகளுக்கு விற்றார். 1950 - களில் பல லட்சம் ரூபாய்கள் கையில். ஒரு சின்னப் பிரச்சினை. அரசாங்கம் தன் ‘தவறை’க் கண்டுபிடித்தது. ரியாலை உருக்குவதற்குத் தடை விதித்தது.
விரைவில், பர்மா ஷெல் கம்பெனியின் துணை நிறுவனமான பெஸ்ஸே என்னும் கம்பெனியில் சேர்ந்தார். தொடர்ந்த வருடங்களில் பல பதவி உயர்வுகள், கணிசமான சேமிப்பு. 1958 - இல் இந்தியா திரும்பினார். அந்த நாட்களில், வெளிநாடுகளில் சம்பாதித்து வருபவர்கள் உள்ளூரில் ஹோட்டல், துணிக்கடை, மளிகைக் கடை தொடங்குவார்கள். அது தன் வழியல்ல என்று திருபாய் முதலிலேயே முடிவு செய்துவிட்டார். அவர் லட்சியம் நிறைய, நிறையப் பணம் பண்ணுவதல்லவா?
மும்பை புறப்பட்டார். இதற்குள், மனைவி, ஒரு குழந்தை. மும்பையில் வசதி குறைவானவர்கள் வசிக்கும் புலேஷ்வர் என்னும் பகுதியில் ஒரு படுக்கையறைக் குடியிருப்பு. அலுவலகம்? 500 சதுர அடிப் பரப்பில் சிறிய அறை வாடகைக்கு எடுத்தார். 15,000 ரூபாய் முதலீடு. ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் தொடங்கினார். இஞ்சி, மஞ்சள், நல்லமிளகு, முந்திரிப் பருப்பு ஏற்றுமதி. எதை விற்கவேண்டும், எதை விற்கவேண்டாம் என்னும் கொள்கையெல்லாம் கிடையாது. எதில் காசு வருமோ, அந்த வியாபாரம்.
திருபாய் பிசினஸில் முதலடி எடுத்து வைத்துக்கொண்டிருந்தபோது, நைலான் நூலிழைக்கு ஏகப்பட்ட டிமாண்ட். நாட்டின் ஏற்றுமதியும், இறக்குமதியும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. இந்தியாவில் தயாரான ரேயான் நூலிழையை ஏற்றுமதி செய்தவர்களுக்கு மட்டுமே நைலானை இறக்குமதி செய்ய அரசு லைசென்ஸ் கொடுத்தது. இந்திய ரேயான் நூலிழை விலை சர்வதேசச் சந்தையைவிட அதிகமாக இருந்தது. ஆகவே, ரேயானை ஏற்றுமதி செய்ய யாராலும் முடியவில்லை.
திருபாய் வித்தியாசமானவர். மற்ற எல்லோரும் பிரச்சினைகளை மட்டுமே பார்த்த ரேயான் ஏற்றுமதியில், யாருக்குமே தெரியாத புத்தம் புதிய வாய்ப்பைப் பார்த்தார். ரேயானை வாங்கினார். வாங்கிய விலைக்கும் குறைவான விலைக்கு ஏற்றுமதி செய்தார். ஏகப்பட்ட நஷ்டம். பைத்தியக்காரன் என்று எல்லோரும் நினைத்தார்கள். நைலான் இறக்குமதி செய்யும் லைசென்ஸ் திருபாய்க்குக் கிடைத்தது. தட்டுப்பாடான பொருள் என்பதால், யானை விலை, குதிரை விலை விற்றது. எக்கச்செக்க லாபம். சில மாதங்களுக்குள், திருபாய் பாடியிருப்பார், ‘காசுமேலே காசு வந்து கொட்டுகிற நேரமிது, வாசக்கதவை ராஜலட்சுமி தட்டுகிற நேரமிது.’
1966. அகமதாபாதில் நூற்பாலை தொடங்கினார். செலவழிப்பதில் மகா கெட்டி. பிர்லா போன்றவர்கள் அத்தகைய தொழிற்சாலைக்கு 30 லட்சம் செலவழித்தபோது, வெறும் மூன்றே லட்சம் முதலீட்டில் திருபாயின் தொழிற்சாலை எழுந்தது. அப்புறம் விமல் சாரிகள், பாலியெஸ்டர் இழைத் தொழிற்சாலை என அமோக வளர்ச்சி. தொட்ட இடமெல்லாம் துலங்கியது. பதினேழு வருடங்களில் ரிலையன்ஸ் இந்தியாவின் மிகப் பெரிய டெக்ஸ்டைல் மில் ஆனது.
1977 - இல் திருபாய் ரிலையன்ஸ் பங்கு களைப் பொதுமக்களுக்கு வழங்கினார். இந்தப் பணம் ரிலையன்ஸின் பிரம் மாண்ட வளர்ச்சிக்கு டானிக் ஆனது.
பாலியெஸ்டர் இழை ஒரு பெட்ரோலியத் தயாரிப்பு. ஆகவே, 1983 - ஆம் ஆண்டு, பெட்ரோலியத் துறையில் இறங்கினார். எதில் இறங்கினாலும், அதிநவீனத் தொழில்நுட்பம், திறமைசாலி ஊழியர்கள் என மாபெரும் படையோடுதான் களத்தில் குதிப்பார். வெற்றிக்கனி தேடி வந்தது.
தன் வளர்ச்சிக்கு கம்பெனி பங்குதாரர் கள் உயிர்நாடி என்பதைத் திருபாய் புரிந்து வைத்திருந்தார். அவருக்கு இணையாகப் பங்குதாரர்களுக்கு முக்கியத்துவம் தந்த இந்தியத் தொழி லதிபர் வேறு யாருமில்லை. வருடாந் திரக் கூட்டத்தை மிகப் பெரிய மைதானங்களில் திருவிழாபோல் நடத்துவார். டிவிடென்ட், போனஸ் ஆகியவற்றைத் தாராளமாகத் தந்து பல லட்சம் சாமானியர்களைக் கோடீஸ்வரர்களாக்கிய பெருமை அவருக்கு உண்டு.
Comments
Post a Comment